E. இந்து
ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த 33 வயதான பெண் ஜோதி மல்ஹோத்ரா. இவர் யூடியூபில் “டிரவல் வித் ஜோ” என்னும் சேனலை நடத்தி வருகிறார். இவரை ஏறத்தாழ 4 லட்சம் பேர் யூடியூப்பில் பின்பற்றுகிறார்கள். இந்நிலையில், இந்திய ராணுவம் தொடர்பான தகவல்களை பாகிஸ்தானிற்கு சட்டவிரோதமாக தெரிவித்ததாக கடந்த மே 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானின் உயர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், குறைந்தது இரண்டு முறையாவது பாகிஸ்தானிற்கு சென்றிருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஜோதி மல்ஹோத்ராவின் தந்தை ஹரிஸ் மல்ஹோத்ரா பேசியுள்ளார். அதில், “ஜோதி வீட்டில் உள்ளவர்களிடம் டெல்லிக்கு செல்வதாகவே கூறி சென்றார். அவர் பாகிஸ்தானிற்கு சென்றாரா? என்பது பற்றி எங்களிடம் எதுவும் கூறவில்லை. ஜோதி கொரோனா பேரிடருக்கு முன்பு டெல்லியில் பணியாற்றி வந்தார். பின்னர் அந்தப் பணியில் இருந்து விலகினார். அது சம்மந்தமாக அவர் டெல்லி செல்வதாக நாங்கள் நினைத்தோம். ஜோதி வீட்டில் வைத்து அவ்வவ்போது வீடியோக்களை எடுப்பாள். அவ்வளவுதான் எனக்கு தெரியும். அவரது நண்பர்கள் என்று யாரும் வீட்டிற்கு வந்தது கிடையாது. கோரிக்கை என்று எங்களுக்கு எதுவும் இல்லை. நடப்பது நடக்கட்டும்” என கூறியுள்ளார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்பு ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசியிருந்த போது, “எங்களுடைய மகள் பாகிஸ்தானுக்கு சென்றது வீடியோக்கள் எடுப்பதற்காகவே. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு அல்ல” என்று ஹரிஸ் மல்ஹோத்ரா கூறியிருந்தார். ஆனால், தற்போது தன்னுடைய மகள் பாகிஸ்தான் சென்றது பற்றி தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜோதி மல்ஹோத்ரா இதுவரை சுமார் 450 வீடியோக்களை யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பாகிஸ்தான் சென்றபோது எடுத்த வீடியோக்களுக்கு கீழ், Indian Girl in Pakistan', 'Indian Girl Exploring Lahore', 'Indian Girl at Katas Raj Temple', 'Indian Girl Rides Luxury Bus in Pakistan' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
ஜோதி மல்ஹோத்ரா, பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட ஏப்ரல் 22ஆம் தேதிக்கு முன்னதாக காஷ்மீருக்கு சென்றுள்ளார். அதேபோல் பாகிஸ்தானிற்கும் சென்றுள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, ஜோதியின் பாகிஸ்தான் பயணத்தில் வேறு ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருவதாக ஹிசார் நகரின் காவல் கண்காணிப்பாளர் சஷாங்க் குமார் சவான் தெரிவித்துள்ளார்.
மேலும், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நடைபெற்ற ராணுவ மோதலின்போது, பாகிஸ்தான் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு அதிகாரியுடன் ஜோதி மல்ஹோத்ரா தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.