இந்தியா

திருடு போன காரை FASTAG மூலம் சில மணி நேரங்களில் கண்டுபிடித்த போலீஸ்!

webteam

FASTAG முறையால் திருடு போன காரை சில மணி நேரங்களில் போலீசார் கண்டுபிடித்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 523 சுங்கவரி வசூல் மையங்களில் FASTAG மின்னணு அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட தொகையை இணையம் மூலமாக செலுத்திக்கொண்டால் ஒவ்வொரு முறை சுங்கச்சாவடியை வாகனம் கடக்கும் போது டிஜிட்டல் முறையில் FASTAG மின்னணு அட்டையில் இருந்து பணம் பெறப்பட்டு, பின் கடந்து செல்ல அனுமதிக்கப்படும்.

ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போது குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வரும். இதன் மூலம் நமது FASTAG மின்னணு அட்டையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். தேவை என்றால் மீண்டும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். நீண்ட நேரம் காத்திருத்தல், சில்லறை பிரச்னை போன்றவற்றுக்கு தீர்வாக FASTAG முறை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த FASTAG முறையை கொண்டு திருடு போன காரை சில மணி நேரங்களில் போலீசார் கண்டுபிடித்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

புனே பகுதியின் கர்வ் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஜாக்டேப். இவர் தனது ஸ்கார்பியோ காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கிவிட்டார். அதிகாலை 4.38 மணிக்கு அவரது செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் FASTAG கணக்கில் இருந்து 35 ரூபாய், தெலகான் சுங்கச்சாவடியில் கழிக்கப்பட்டது என இருந்துள்ளது. ஆனால் ராஜேந்திர ஜாக்டேப் தூக்கத்தில் இருந்ததால் மெசேஜை கவனிக்கவில்லை. காலை 5.50 மணிக்கு மீண்டும் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், உங்கள் FASTAG கணக்கில் இருந்து 35 ரூபாய், பன்வேல் சுங்கச்சாவடியில் கழிக்கப்பட்டது என இருந்துள்ளது.

அப்போது மெசேஜை கவனித்த ஜாக்டேப், வெளியில் நிற்கும் காருக்கு எப்படி சுங்கச்சாவடியில் பணம் கழிப்பார்கள் என சந்தேகம் அடைந்துள்ளார். உடனடியாக வெளியே சென்று பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கார் காணாமல் போயுள்ளது. உடனடியாக காவல் நிலையம் சென்று தகவல் கொடுத்த ஜாக்டேப் தனது காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் வசதியையும் பயன்படுத்தியுள்ளார். ஜிபிஎஸ் வசதி மற்றும் சுங்கச்சாவடி வழிகளை கொண்டு கார் சென்றுகொண்டிருக்கும் வழியை கண்டுபிடித்த போலீசார் அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் காவல்நிலையத்துக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

தானே பகுதியில் கார் இருக்கிறது என்று தெரிந்துகொண்ட போலீசார் அப்பகுதியை நெருங்கியுள்ளனர். அதற்குள் காரில் இருந்த ஜிபிஎஸ்சை திருடர்கள் துண்டித்துள்ளனர். ஆனாலும் தானே பகுதியை சுற்றி சோதனை செய்த போலீசார் தனியாக நிறுத்தப்பட்ட காரினை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர். காரினை திருடிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்