இந்தியா

ஃபாஸ்டேக் மூலம் எத்தனை கோடி ரூபாய் வசூல்? - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

ஃபாஸ்டேக் மூலம் எத்தனை கோடி ரூபாய் வசூல்? - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

சங்கீதா

தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டாக் கட்டண முறை மூலம், இதுவரை 58 ஆயிரத்து 188 கோடியே 53 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக ஃபாஸ்டேக் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், அதிகளவிலான வாக ஓட்டிகள் ஃபாஸ்டேக்கை பயன்படுத்தாததால், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மேலும் சில்லரை வழங்குவதிலும் சிக்கல் நிலவியதால், வாகனங்கள் வரிசையில் காத்துக் கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது.

இந்தப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது, “நாடு முழுவதும் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 4.59 கோடிக்கும் மேற்பட்ட ஃபாஸ்டேக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்டேக்குகள் மூலம் இதுவரை 58 ஆயிரத்து 188 கோடியே 53 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணமாக வசூலாகியுள்ளது. 2020-ம் நிதியாண்டில் ஃபாஸ்டேக் மூலம் பெறப்பட்ட கட்டணம், 10,728.52 கோடி ரூபாய் வசூலாக உள்ளது. 2021-2022 நிதியாண்டில் அரசுக்கு ஃபாஸ்டேக் மூலம் ரூ.26,622,93 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. 2021-2022-ம் நிதியாண்டில் ஃபாஸ்டேக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.5 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி முதல், 2022-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி வரை ஃபாஸ்டேக் பயன்படுத்தும் 12.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து, தவறாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது” இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.