விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் தமிழக விவசாயிகள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி, 41 நாட்கள் நடத்திய தொடர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட விவசாயிகள் தற்போது மீண்டும் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் வெட்ட வெளியில் அசராது தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
வங்கிக்கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 41 நாட்கள் நடத்திய தொடர் போராட்டதுக்கு பிறகு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட விவசாயிகள் நேற்று முதல் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரவு நேரங்களிலும் போராட்டக் களமான ஜந்தர் மந்தரிலேயே தங்கியிருந்து போராட்டதில் கலந்துகொண்டுள்ளனர்.
விவசாயிகள் இரவு நேரங்களில் உறங்குவது, உணவு உண்பது, உடைமைகளை வைத்துக்கொள்வது எல்லாமே ஜந்தர் மந்தரில் வெட்ட வெளியில்தான். விவசாயிகள் தங்குவதற்கு இன்னும் கூடாரம் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே கடும் இன்னல் மற்றும் பல சிரமங்களுக்கு இடையேதான் விவசாயிகள் தங்களது இரவு வாழக்கையை கழிக்க வேண்டி இருக்கிறது.
டெல்லியில் தற்போது மழைக்காலம் என்பதால் அவ்வபோது திடீரென்று மழைப்பொழிவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதனால் கொசுக்கடி, இரவு நேர குளிர் போன்றவற்றுக்கு இடையே விவசாயிகள் அல்லல்படுகின்றனர். இரவு நேரங்களில் திடீரென்று மழை பெய்தால் தங்களது உடைமைகளை எங்கு பாதுகாப்பது, எங்கு தங்குவது என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர் விவசாயிகள். தாங்கள் தங்குவதற்கு விரைவாக கூடாரம் அமைக்கப்பட்டால் தங்களின் பொருட்களை பாதுகாப்பாக வைக்க முடிவதோடு தங்களின் சிரமங்கள் சிறிது குறையும் என்கின்றனர் விவசாயிகள்.