இந்தியா

தீவிரமடையும் டெல்லி விவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா?

webteam

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி 6-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம், மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்நிலையில் டெல்லி விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியை அதிரவைத்துக்கொண்டுள்ளனர் விவசாயிகள். கொட்டும் பனியிலும் இரவு முழுவதும் சாலையிலேயே தங்கி போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து வருகின்றனர். புராரி, காஜிபூர், திக்ரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டத்தால் உத்தரபிரேதசம், பஞ்சாப், ஹரியானா எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் தடைகளை உடைத்து விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். போராட்டம் தீவிரமடையும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து டெல்லி எல்லையில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இதற்கிடையே இன்று மாலை 3 மணியளவில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆனால் பெரும்பாலான விவசாய சங்கங்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம், திருத்தம் மட்டுமே செய்வோம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒருவேளை இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா அல்லது விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவார்களா என்பது இன்று மாலையே தெரியவரும்.