இந்தியா

மகளின் ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட்போன் இல்லை.. ஒற்றைப் பசுவை விற்ற தந்தை..!

மகளின் ஆன்லைன் படிப்புக்கு ஸ்மார்ட்போன் இல்லை.. ஒற்றைப் பசுவை விற்ற தந்தை..!

webteam

ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தன் மகளின் ஆன்லைன் வகுப்புக்காக தான் வளர்த்துவந்த ஒற்றைப் பசுவை விற்ற சம்பவம் பலருடைய இதயங்களைத் தொட்டுவிட்டது.

கொரோனா காரணமாக பள்ளியில் ஆன்லைன் வகுப்பைத் தொடங்கும்போது அவரது பத்து வயது மகளிடம் ஸ்மார்ட்போன் இல்லை. வீடு வீடாக அலைந்திருக்கிறார். அவரால் புதிய ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்க முடியவில்லை. மகளும் எளிதில் சமாதானம் அடையவில்லை.

எட்டாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திக்கொண்ட இந்த விவசாயி, தன் குழந்தைகள் நிறைய படிக்கவேண்டும் என்று விரும்பினார். மகளிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளமுடியவில்லை. ஒரு நாள் முழுவதும் மகள் சோகமாக இருப்பதைக் கண்ட அவர், ஸ்மார்ட் போன் வாங்கும் முடிவுக்கு வந்தார்.

தன் நண்பர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்று ஸ்மார்ட்போன் வாங்கித்தந்தார். மகளுக்கு ஆச்சரியம். சில வாரங்களிலேயே நண்பர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்க, குடுமபத்திற்கே பால் கொடுத்துவந்த ஒற்றைப் பசுவை விற்கவேண்டியிருந்தது.

"என் மகளின் கனவு ஒரு மருத்துவராக வேண்டும் என்பது. அதற்காக நான் எதையும் செய்வேன்" என்று நெகிழ்ந்து பேசுகிறார் அந்த பாசக்கார தந்தை.