இந்தியா

விவசாயி மகன் TO குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்! ஜெகதீப் தங்கரின் பின்னணி!

ச. முத்துகிருஷ்ணன்

பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் யாரென்பது குறித்து தீர்மானிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட கட்சியின் பல மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அறிவித்தபின் பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா “ஜெகதீப் தங்கார் ஒரு விவசாயியின் மகன். தனது திறமையால் மக்களின் ஆளுநராக உயர்ந்தவர்” என்று குறிப்பிட்டார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 391 நாடாளுமன்ற உறுப்பினரின் (மக்களவை அல்லது மாநிலங்களவை வாக்குகள் தேவை. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 394 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பது நினைவுகூறத் தக்கது.

ஜெகதீப் தங்காரின் பின்னணி:

71 வயதான ஜெகதீப் தாங்கர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். ஜனதா தளம் கட்சியில் சேர்ந்த அவர் 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 ஆம் ஆண்டு சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை ராஜாங்க அமைச்சராக அங்கம் வகித்துள்ளார். மக்களவை உறுப்பினர், ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்து அரசியல் அனுபவம் பெற்றவர் ஜெகதீப் தங்கார்.

2019 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஜெகதீப் தங்கார் மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் தங்காருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.