இந்தியா

இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவி கேட்ட பெண்: நகைச்சுவையாக பதிலளித்த சோனு சூட்!!

webteam

பாலிவுட் நடிகர் சோனு சூட் ஊரடங்கு ஆரம்பமான காலத்தில் இருந்தே, வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு உதவி செய்தல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். ஒரு விவசாய குடும்பத்திற்கு டிராக்டர் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். கோரக்பூரைச் சேர்ந்த 22 வயது பெண்மணியான தேவ வந்திதா என்பவரின் முழங்கால் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான 1.20 லட்சம் பணத்தை வழங்கி உதவி செய்தார்.

காய்கறி வியாபாரம் செய்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு, வேலை வாங்கித் தந்தது என சமூக வலைதளங்களில் அவர் பார்வைக்கு வந்த பிரச்னைகளுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார். ட்விட்டரில் பலரும் தங்களுக்கான தேவையை சோனு சூட்டிடம் கேட்டு வருகின்றனர். சிலர் விளையாட்டாகவும் சில உதவிகளை கேட்கின்றனர். அதற்கு சோனு சூட் நகைச்சுவையாக பதிலளித்து பாராட்டை பெறுகிறார். சமீபத்தில் ஒருவர் தனக்கு வீடியோ கேம் வேண்டுமென கேட்க அதற்கு வேண்டுமென்றால் புத்தகங்கள் அனுப்புகிறேன் என பதிலளித்தார். இந்நிலையில் ட்விட்டர்வாசி ஒருவர் சோனு சூட் என்னுடைய செல்போனில் இணையம் வேகம் குறைவாக இருக்கிறது.

வேகப்படுத்த முடியுமா என கிண்டலாக கேள்வி எழுப்பினார். அதற்கு தன் பாணியிலேயே பதில் அளித்த சோனு சூட், காலை வரை பொறுத்துக்கொள்ள முடியுமா? இப்போது தான் நான் ஒருவரின் கம்யூட்டரை சரி செய்து கொண்டு இருக்கிறேன். ஒருவருக்கு திருமண ஏற்பாட்டை முடித்துக் கொண்டு இருக்கிறேன்.

ஒருவருக்கு ரயில் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறேன். ஒருவரின் தண்ணீர் பிரச்னையை சரி செய்கிறேன்.சில முக்கியமான வேலைகளை மக்கள் எனக்கு கொடுத்துள்ளனர். என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். சோனு சூட்டின் இந்த நகைச்சுவை பதிலுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.