சோனு நிகாம் x page
இந்தியா

பஹல்காம் கருத்து | “யார் மீது தவறு” - கர்நாடக மக்களிடம் நியாயம் கேட்கும் பாடகர் சோனு நிகாம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்தது குறித்து பாடகர் நிகாம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்டதொரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.

Prakash J

பிரபல பாடகரான சோனு நிகாம், கடந்த ஏப்ரல் 25-26 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, ஓர் இளைஞர் நிகாமிடம் கன்னடத்தில் ஒரு பாடலைப் பாடுமாறு பலமுறை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது, அவருக்குக் கோபத்தைத் தூண்டியுள்ளது. இதையடுத்து நிகாம், “ 'கன்னடம், கன்னடம்' என்று கத்திய விதம் எனக்குப் பிடிக்கவில்லை. இதுபோன்ற நடத்தையால்தான் பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன” எனப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வைரலான நிலையில், கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா மற்றும் ஆர்வலர் எஸ்.ஆர். கோவிந்து உட்பட பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றன. மேலும், கன்னட ஆதரவு அமைப்பான கர்நாடக ரக்ஷண வேதிகே, நிகாம் மீது வழக்குப்பதிவு செய்யச் சொல்லி பெங்களூருவில் உள்ள அவலஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பாடகர் நிகாம் தனது இன்ஸ்டா பக்கத்தில் நீண்டதொரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “கர்நாடகாவில் மட்டுமல்ல, உலகின் வேறு எந்த திசையில் இருக்கும்போது மொழி, கலாசாரம், இசை, இசைக்கலைஞர்கள், மாநிலம் மற்றும் மக்கள் மீது நான் உண்மையான அன்பைக் கொடுத்திருக்கிறேன். உண்மையில், இந்தி உட்பட பிற மொழிகளில் உள்ள எனது பாடல்களைவிட எனது கன்னடப் பாடல்களை நான் மிகவும் மதித்துள்ளேன். இதற்குச் சான்றாக சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பரவி வருகின்றன.

கர்நாடகாவில் இருக்கும்போது ஒவ்வோர் இசை நிகழ்ச்சிக்கும் நான் தயாரிக்கும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான கன்னடப் பாடல்கள் என்னிடம் உள்ளன. இந்த நிலையில், அன்றைய நாளில் ’நான் அவர்களிடம் மிகவும் பணிவாகவும் அன்பாகவும், நிகழ்ச்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது. இது எனது முதல் பாடல். நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். ஆனால், நான் திட்டமிட்டபடி கச்சேரியைத் தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று சொன்னேன்.

ஒவ்வொரு கலைஞரும் நிகழ்ச்சிக்கென ஒரு பாடல் பட்டியலைத் தயாரித்துள்ளனர். அதனால் இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒத்திசைவுடன் இருக்கிறார்கள். ஆனால் அங்கு இருந்தவர்கள், ஒரு சலசலப்பை உருவாக்கி என்னை மிரட்டுவதில் உறுதியாக இருந்தனர். இதில், யார் தவறு என்று நீங்களே சொல்லுங்கள்? இங்கே யார் தவறு என்பதை கர்நாடகாவின் விவேகமுள்ள மக்களே தீர்மானிக்க விட்டுவிடுகிறேன். உங்கள் தீர்ப்பை நான் மனதார ஏற்றுக்கொள்வேன்" அதில் தெரிவித்துள்ளார்.