abhijeet bhattacharya x page
இந்தியா

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்து|பிரபல பாடகருக்கு எதிர்ப்பு! யார் இந்த அபிஜித் பட்டாச்சார்யா?

பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Prakash J

பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா இந்தி மற்றும் பெங்காளி மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். ஷாருக்கானின் ஆஸ்தானப் பாடகர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் அளித்த பேட்டியில், “இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் மகாத்மா காந்தியைவிடவும் மேலானவர். மகாத்மா காந்தியை எப்படி தேசத் தந்தை என்று அழைக்கிறோமோ அதேபோல, இசையுலக தேசத்தின் தந்தை ஆர்.டி.பர்மன் ஆவார். மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை. இந்தியாவிற்கு அல்ல.

இந்தியா முன்பிருந்தே இங்கிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. காந்தியைத் தவறுதலாக இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கிறோம். அவர் பாகிஸ்தானின் இருப்புக்கு காரணமானவர்” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

யார் இந்த அபிஜித் பட்டாச்சார்யா?

பின்னணிப் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா இந்தி இசைத் துறையில் பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் அவரை ஒரு பெங்காலி திரைப்படத்தில் அறிமுகமானார். அவர் முதன்முதலில் ஆஷா போஸ்லேவுடன் இணைந்து பாடிய ஒரு டூயட் பாடல் மூலம் பிரபலமடைந்தார். அவர் ஆரம்பகட்டத்தில், ஆர்.டி.பர்மனுடன் இணைந்து பாடகராக மேடை நிகழ்ச்சிகளில் பல பாடல்கள் பாடி பிரபலமானார். பல ஆண்டுகளாக, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் ஆனந்த், அமீர் கான், சல்மான் கான், சைஃப் அலி கான், சன்னி தியோல், சஞ்சய் தத், கோவிந்தா, அக்ஷய் கண்ணா, அக்‌ஷய் குமார், சுனில், அஜய் தேவ்கன், ஹிருத்திக் ரோஷன், ரன்பீர் கபூர், சந்திரச்சூர் சிங், பாபி தியோல், ஜிதேந்திரா குமார் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்களுக்காகவும் அவர் பாடி வருகிறார். 1990களில் அவருடைய பல பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தன. இதன் காரணமாகவே இந்தியில் முன்னணி பாடகராக உருவெடுத்தார்.