செய்தியாளர் - கார்த்திகேயன்
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் லாவன்யா குங்குலா காரு. 32 வயதான இவர், சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில், நரம்பியல் துறையில் சிறப்பு பட்ட மேற்படிப்பு பயின்றிருக்கிறார். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அரிதான தன்னுடல் தாக்க நோயான மயாஸ்தீனியா கராவிஸ் மருத்துவர் லாவண்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை கடுமையாக பாதித்து, தசைகளை செயலிழக்க செய்யும் மிக மோசமான நோயாக இது பார்க்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு, நெஞ்சுப்பகுதியில் இருக்கும் தைமஸ் எனும் நாளமில்லா சுரப்பி நீக்க அறுவை சிகிச்சை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, நீண்ட ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும், நான்கு மாதங்களிலேயே அவர் தனது பணிக்கு திரும்பியுள்ளார். இதுமட்டுமின்றி, இலவச மருத்துவ சேவை செய்வதற்காக வாகனம் ஒன்றை வாங்கி, பல்வேறு கிராமங்களுக்கு சென்ற லாவண்யா, மயாஸ்தீனியா கிராவிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆதரவு குழுவை ஆரம்பித்து, நிர்வகித்து வந்துள்ளார். தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பிறருக்கு வரக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மயாஸ்தீனியா கிராவிஸ் மற்றும் பல்வேறு நரம்பியல் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களை, சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.
இவ்வாறு பல்வேறு சேவைகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வந்த மருத்துவர் லாவண்யா, அண்மையில் காலமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பெண் மருத்துவர் உயிரிழப்புக்கு காரணமாக கூறி பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், மயாஸ்தீனியா க்ரைசிஸ் தீவிரம் அடைந்ததால், அவரது சுவாசித்திற்கு தேவையான தசைகள் செயலிழந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டபோதிலும், மக்களுக்கு சேவையாற்ற நினைத்த அந்த பெண் மருத்துவரின் தியாகத்தை, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும், அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் கூறி வருகின்றனர்.