பெங்களூரு அருகே உரிமம் இல்லாமல் மருந்துகளை மறுபேக் செய்து புதிய லேபிள் ஒட்டி விற்பனை செய்த கும்பல் மீது சோதனையில் ரூ.5.05 கோடி மதிப்பிலான போலி மருந்துகள், இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறைந்த விலை மருந்துகளை உயர்ந்த உயிர்காக்கும் மருந்துகளாக மாற்றி விற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
கர்நாடகாவில் போலி மருந்துகள் தயாரித்து, விற்பனை செய்ததாக எழுந்துள்ள புகார் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதி அருகே ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் இல்லாமல் மருந்துகளை மறுபடியும் பேக் செய்து, புதிய லேபிள்கள் ஒட்டி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ.5.05 கோடி மதிப்பிலான போலி மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் அச்சிடும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குறைந்த விலையில் வாங்கப்பட்ட மருந்துகளை, விலை உயர்ந்த உயிர்காக்கும் மருந்துகளாக மறுபெயரிட்டு விற்பனை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 16 மருந்து உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, 8 உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. Drugs and Cosmetics Act, 1940-ன் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து Pfizer நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் நோயாளிகளின் பாதுகாப்பு, தயாரிப்பு தரம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகக் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தங்கள் கவனத்திற்கு வந்ததில் இருந்து கடந்த ஒரு மாதமாக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக Pfizer தெரிவித்துள்ளது. விசாரணைக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக, போலி மருந்துகளில் தங்களது உண்மையான மருந்துகளின் Batch Number-கள் நகலெடுக்கப்பட்டிருந்ததால், குழப்பத்தைத் தவிர்க்க சம்பந்தப்பட்ட சில Pfizer மருந்து அட்டைகளை சந்தையில் இருந்து அகற்றியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உண்மையான மருந்துகளையும் போலி மருந்துகளையும் வேறுபடுத்திக் கண்டறிய அதிகாரிகளுக்கு உதவியதுடன், பாதிக்கப்பட்ட மருந்து அட்டைகள் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் தேவையான தகவல்களையும் வழங்கியதாக கூறியுள்ளது.