இந்தியா

"‌விதிகளை பின்பற்றாததே கேரளாவில் தொற்று உயரக் காரணம்" - மத்திய நிபுணர் குழு அறிக்கை

PT WEB

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்காததே கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்க காரணம் என அங்கு ஆய்வு செய்த நிபுணர்கள் குழு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் சுமார் 40% கேரளாவில் மட்டும் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அங்கு நிலவரத்தை ஆய்வு செய்ய, தேசிய நோய்த்தடுப்பு மைய இயக்குநர் சுஜீத் சிங் தலைமையில் ஒரு குழுவை மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது. இக்குழு கேரளாவில் இரு பிரிவாக பிரிந்து சென்று விரிவான ஆய்வுகள் நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

அதில், 'கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதிலும் தொற்று பரிசோதனைகளை செய்வதிலும் அரசு மந்தமாக இருக்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.