இந்தியா

360 கோடி ரூபாய் செலவில் புதிய பிரதமர் இல்லம் - சிறப்பம்சங்கள் என்னென்ன ?

webteam

"சென்ட்ரல் விஸ்டா"  திட்டத்தின் ஒரு பகுதியாக 360 கோடி ரூபாய் செலவில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குடியரசு தலைவர் இல்லம் அருகே அதற்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சவுத் பிளாக் பகுதிக்கு அருகே புதிய பிரதமர் இல்லம் அமையும் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன.

தற்போது பிரதமர் இல்லம் "7, லோக் கல்யாண் மார்க்" என்கிற விலாசத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் "சென்ட்ரல்  விஸ்டா" திட்டத்தில் புதிய நாடாளுமன்ற வளாகத்துடன், புதிய பிரதமர் இல்லம் மற்றும் புதிய குடியரசு துணைத் தலைவர் இல்லம் அமைக்கும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் பொதுப்பணித்துறை மூலம் இறுதி செய்யப்படும் என அவர்கள் வலியுறுத்தினர். தற்போது குடியரசு துணை தலைவருக்கான இல்லம் விஞ்யான் பவன் அருகே அமைந்துள்ளது.

குடியரசு தலைவர் இல்லம் அருகே புதிய நாடாளுமன்ற வளாகம், புதிய பிரதமர் இல்லம் மற்றும் புதிய குடியரசு துணைத் தலைவர் இல்லம் ஆகியவற்றை அமைப்பதன் மூலம் ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே இந்த முக்கிய வளாகங்களுக்கிடையே பயணம் செய்ய உட்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. புதிய குடியரசு துணைத் தலைவர் இல்லம் நார்த் பிளாக் பின்புறம் உள்ள சர்ச் ரோடு அருகே அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடம் குடியரசுத் தலைவர் இல்லத்துக்கு அருகாமையில் உள்ளது. நாடாளுமன்ற வளாகம், புதிய பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் மற்றும் புதிய குடியரசு துணைத் தலைவர் இல்லம் ஆகியவற்றை சுரங்கப்பாதை மூலம் இணைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதிய பிரதமர் இல்லத்தில் பிரதமர் பயன்படுத்த அலுவலகம் மற்றும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் "கருப்பு பூனைகள்" என அழைக்கப்படும் "ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் குரூப்"  கமாண்டோக்களுக்கான முகாம் ஆகியவை அமைய இடம் ஒதுக்கப்படுகிறது. அத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது. இதைத் தவிர பிரதமர் வெளிநாட்டு தலைவர்கள் போன்ற முக்கிய விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிப்பதற்காக சிறப்பு வசதிகளும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமானம் வேகமாக நிறைவடைந்து வரும் நிலையில், "சென்ட்ரல் விஸ்டா" திட்டத்தின் பிற முக்கிய அம்சங்களான புதிய பிரதமர் இல்லம் மற்றும் புதிய குடியரசு துணைத் தலைவர் இல்லம் ஆகியவற்றின் பணிகளை தொடங்க மத்திய அரசு முனைந்துள்ளது. சமீபத்தில் "சென்ட்ரல் விஸ்டா" திட்டத்தின் ஒரு பகுதியான "விஜய் சவுக்- இந்தியா கேட்" சாலை பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் "இந்தியா கேட்" பகுதியில் புதிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

-  கணபதி சுப்ரமணியம்