இந்தியா

பிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா?-  உண்மை என்ன?

பிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா?-  உண்மை என்ன?

webteam

மாமல்லபுர கடற்கரையில் பிரதமர் மோடியை புகைப்படம் எடுத்ததாக பரவும் புகைப்பட குழுவினர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இருவரும் அங்குள்ள சிற்பங்களை பார்த்து வியந்தனர். பின்னர் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய பிரதமர் மோடி கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். கால்களில் செருப்பு அணியாமல் சென்ற அவர், கடற்கரை மணலில் கிடந்த குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரம், துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி, பொது இடங்களை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.  மேலும் இது தொடர்பாக புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டார். 

பிரதமர் மோடியின் இந்த செயலுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. பிரதமரின் செயலுக்கு ஒரு தரப்பினர் பாராட்டுகள் தெரிவித்தாலும் மற்றொரு தரப்பினர் இது திட்டமிடப்பட்ட விளம்பரம் என தெரிவித்தனர். இதற்கிடையே வெளிநாட்டு புகைப்பட கலைஞர்கள் கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் புகைப்படமும் வெளியானது. எனவே மோடியின் புகைப்படங்களுக்கு பின்னே பெரிய குழுவே வேலை பார்த்தது என பலரும் பதிவிட்டனர். எம்.பி கார்த்தி சிதம்பரமும் அதே புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

ஆனால் வெளிநாட்டு குழுவினர் இருப்பது போன்ற புகைப்படம் 2005ம் ஆண்டு ஸ்காட்லாந்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்துக்கு பின்னால் இருக்கும் கட்டிடங்கள் ஸ்காட்லாந்தில் உள்ளவை என்றும், இது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் இந்தியா டூடே பத்திரிகை தெளிவுபடுத்தியுள்ளது.