இந்தியா

இன்று நாடு திரும்புகிறார் அபிநந்தன் !

இன்று நாடு திரும்புகிறார் அபிநந்தன் !

webteam

''பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்த இந்திய விமானி அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்''

புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுரத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கும் உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா, அதிரடியாக எடுத்து வருகிறது.

கடந்த 26ம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. அதில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் பிடித்து வைத்தது. 

பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அவரது உறவினர், கிரமத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். மத்திய அரசும் இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு தூதரகத்திடம் வலியுறுத்தியது.

இந்நிலையில், ''இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பவே பாகிஸ்தானிடம் வலியுறுத்தினோம்; மேலும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இன்று விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார். நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாகாணம் வாகா எல்லையில் விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லது அபிநந்தன் விமானம் மூலம் டெல்லி, மும்பை அல்லது அமிர்தசரஸ் அழைத்து வரப்படுவார் எனவும் கூறப்படுகிறது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை வட்டாரங்கள், தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காதவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. சர்வதேச நிர்பந்தம், ஜெனீவா உடன்படிக்கையின் படியே விமானி விடுவிக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளன.