சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, அங்கு வந்த நபர் ஒருவர், துப்பாக்கியால் சுட்டார். இதில், மாணவர் ஒருவர் காயம் அடைந்தார். பின்னர், போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நொய்டாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கோபால் சர்மா என டெல்லி போலீசார் தெரிவித்தனர். கோபால் சர்மா யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கோபால் சர்மா லைவ் வீடியோ பதிவிட்டுள்ளார். அதேபோல், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தான் இறந்துவிட்டால் தன் மீது காவிக் கொடி போர்த்த வேண்டும் என்றும் தன்னுடைய ஆதரவாளர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட கோபால் சர்மாவின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஃபேஸ்புக் தரப்பில், “ஃபேஸ்புக்கில் இதுபோன்ற வன்முறை சம்பவங்களுக்கு இடம் கிடையாது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவரின் ஃபேஸ்புக் கணக்கை நீக்கிவிட்டோம். அதேபோல், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவருக்கு ஆதரவான பதிவுகளையும் விரைவில் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.