இந்தியா

நேர்மை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்துகிறோம் - ஃபேஸ்புக் விளக்கம்

நேர்மை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்துகிறோம் - ஃபேஸ்புக் விளக்கம்

EllusamyKarthik

இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பான குற்றச்சாட்டிற்கு ஃபேஸ்புக் நிறுவனம் பதிலளித்துள்ளது. ஆளும் கட்சித் தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்க மறுத்துவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் பதில் கொடுத்துள்ளது.

ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்து பா.ஜ.க தலைவர் ராஜா சிங் பதிவிட்ட சர்ச்சைக்குரிய பதிவை நீக்க ஃபேஸ்புக் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கருத்து (Hate Speech Policies) கொள்கையை பயன்படுத்த அந்நிறுவனத்தின் இந்திய கொள்கைத் தலைவர் அங்கி தாஸ் மறுத்துவிட்டதாக ஆகஸ்ட் 14 அன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டிருந்தது.

‘எந்தவித அரசியல் அமைப்பையோ அல்லது கட்சிகளையோ சாராது வன்முறையைத் தூண்டும் மற்றும் உலகளவில் செயல்படுத்தப்படும் சர்ச்சைக்குரிய கருத்து மற்றும் உள்ளடக்கத்தை வெளியிடுவதை கொள்கை அடிப்படையில் எங்கள் நிறுவனம் தடை செய்கிறது. நேர்மை மற்றும் துல்லியத்தை உறுதிப்படுத்த வழக்கமான தணிக்கைகளை மேற்கொள்கிறோம்’ என ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

‘இந்தியாவில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்துகின்றன' என ராகுல் காந்தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியை மேற்கோள் காட்டி கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.