இந்தியா

சந்திரயான்-2 தொழில்நுட்பம் சரியானதா ? - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்

சந்திரயான்-2 தொழில்நுட்பம் சரியானதா ? - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்

rajakannan

சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தது குறித்து மூத்த விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து இருந்தார். அப்போது பேசிய சிவன், “சந்திரயான்-2 திட்டம் இரு வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று அறிவியல், 2-வதாக தொழில்நுட்பம். அறிவியல் என்ற நோக்கத்தில் நாங்கள் முழுமையாக வெற்றி பெற்றுவிட்டோம். 2-வதாக தொழில்நுட்பம் விஷயத்தில் வெற்றியின் சதவீதத்தை ஏறக்குறைய முழுமையாக அடைந்துவிட்டோம். அதனால்தான் சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வரை வெற்றி என்று கூறுகிறோம்” என்று தெரிவித்தார்.

சந்திரயான்-2 திட்டம் 98 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தது குறித்து மூத்த விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இஸ்ரோ தலைவருக்கான ஆலோசகர் தபன் மிஸ்ரா சிவனின் பேச்சை மறைமுகமாக விமர்சித்துள்ளார். பெயர் எதனையும் குறிப்பிடாமல், “தலைவர்கள் ஊக்கமளிக்கிறார்கள், அவர்களால் நிர்வகிக்க முடிவதில்லை” என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இவர், இஸ்ரோ தலைவராக சிவன் பொறுப்பேற்ற பிறகு இவர் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் இயக்குநர் பதவியில் இருந்து வெளியேறினார்.

மிஸ்ரா தன்னுடைய பதிவில், “திடீரென விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தும் போது, திடீரென அதிகரிக்கும் பணிச்சுமைகள், தொடர்ச்சியான சந்திப்புகள், அனல் பறக்கும் விவாதங்கள் போன்றவற்றால் ஒரு நிறுவனத்தில் அரிதாகத்தான் தலைமை உருவாகும். புதுமைகளுக்கு தடை விதித்துவிட்டு நிறுவனம் வளர்ச்சி அடைய முடிவதில்லை. இறுதியில், வரலாற்றில் வெறும் அடிக்குறிப்புகள் மட்டுமே மிச்சமிருக்கும்” என சூசகமாக சாடியுள்ளார்.

மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், “ஆழமான சுயபரிசோதனை செய்யாமல் கருத்து தெரிவிப்பது, உலகத்தின் முன்னாள் நம்மை நகைப்புக்கு உரியவர்கள் ஆக்கிவிடும்” என தெரிவித்தார். மற்றொரு விண்வெளி அறிஞர் கூறுகையில், “5 தர்ஸ்டர்களுக்கு(இஞ்சின்) பதிலாக ஒரே ஒரு தர்ஸ்டரை இஸ்ரோ பயன்படுத்தி இருக்க வேண்டும். அதுதான் கையாள்வதற்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும். உலகம் முழுவதும் ஒரு தர்ஸ்டரை பயன்படுத்தும் வழக்கம்தான் இருந்து வருகிறது” என்றார்.