இந்தியா

’பல குடும்பங்கள் அழியும்’- ‘லோன்-ஆப்’ ஆல் பாதிக்கப்பட்டவரின் அனுபவம்: PT DIGITAL Exclusive

EllusamyKarthik

கொரோனா பெருந்தொற்று மனித வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறது. வழக்கமாக இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி துறை நிறுவனங்கள் மட்டுமே வாகன கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், தனிநபர் கடன் என வெவ்வேறு வகையான கடன்களை மக்களுக்கு கொடுத்து வந்தன. கொரோனா பொது முடக்கம் மக்களை வீட்டிலேயே முடக்கி விட அதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள விரும்பிய பெரும் பணம் படைத்த பண முதலைகள் அறிமுகம் செய்தது தான் ‘லோன்-ஆப்’.

ஆம், ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும். இப்போதெல்லாம் சிறிய மற்றும் பெரிய தொகை லோன்கள் ரொம்ப ஈசியாகவே கிடைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய பலம் என்றாலும் இந்த "லோன் ஆப்"கள் மூலம் மிகப்பெரிய மோசடியும் நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு தெரியாது. எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை, எந்த பேப்பரையும் நீட்ட வேண்டியதில்லை, மொபைல் ஆப் ஒன்றே போதும், கடன் வாங்குவதற்கு. ஆம் ஆதாரும், பான் அட்டையும் இருந்தாலே போதுமானது. இதை படிப்பதற்கே கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? 

டிஜிட்டல் முறையில் ஒருவரின் KYCயை மட்டும் அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் மூலம் கடன் கொடுப்பது தான் இதன் நோக்கம்.

அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களே இதில் ஈடுபடுவதாகவும் நிதித்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைய காலமாக அது மாதிரியான அப்ளிகேஷன்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உலாவிக் கொண்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

“ஊரடங்கு சமயத்தில் தான் இது மாதிரியான அப்ளிகேஷன் மூலம் கடன் வழங்கும் நடைமுறை அதிகரித்துள்ளது. இந்த அப்ளிகேஷன்கள் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் கோலோச்சி வரும் நிறுவனங்களின் பெயரை போலவே கிட்டத்தட்ட இருப்பதால் மக்களும் அறியாமையினால் இதில் சிக்கி கொள்கிறார்கள். 4 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வரை இந்த அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்தியுள்ளனர்.

இந்த அப்ளிகேஷன்கள் குறித்து ஆராய்ந்த போது இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. சீன நிறுவனமான அலிபாபாவின் கீழ் அதன் சர்வர்கள் இயங்குகின்றன. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் முயற்சியாக கூட இது நடந்திருக்கலாம்” என்கிறார் நிதி சார்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ஸ்ரீகாந்த். 

அவசர தேவைக்காக இந்த லோன் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி கடன் வாங்கிய அப்பாவி மக்களிடம் இந்த அப்ளிகேஷன் நிறுவனங்கள் காட்டுகின்ற அடாவடி தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி வருவதாகவும் இணையத்தில் புகார்கள் பறக்கின்றன. தவணைகளை ஒழுங்காகச் செலுத்தினால் பிரச்னையில்லை. ஆனால் சில நாள்களில் தவணையை கட்ட தவறினால் சிக்கல் தான்.

இந்நிலையில் இந்த லோன் அப்ளிகேஷனால் பாதிக்கப்பட்ட ஒருவர் புதிய தலைமுறை டிஜிட்டலுடன் தனக்கு நேர்ந்த சங்கடங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது வேண்டுகோளுக்கு ஏற்ப பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.

“சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தான் நான் வேலை செய்து வருகிறேன். மிடில் கிளாஸ் குடும்பம். நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருந்த போது ‘அப்ளிகேஷன் மூலம் கடன்’ என்ற விளம்பரம் எனது கண்ணில் தென்பட்டது. அப்போது எனக்கு பணத் தேவை இருந்ததால் அந்த லிங்கை கிளிக் செய்தேன். அதில் ‘CASH ON’, ‘GO CASH’ என வெவ்வேறு பெயர்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கடன் கொடுக்க (LENDERS) தயாராக இருந்தார்கள்.

அதில் நான் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து கடனுக்காக விண்ணப்பித்து இருந்தேன். உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனை எனது போனில் இன்ஸ்டால் செய்யுமாறு வலியுறுத்தினார்கள். நானும் அதை இன்ஸ்டால் செய்தேன். அப்போது எனது போனில் உள்ள CONTACTS உட்பட அனைத்திற்கு ALLOW கொடுக்க வேண்டியிருந்தது. அதை செய்த பிறகு எனது புகைப்படங்கள், ஆதார் அட்டை, பான் கார்டு என அனைத்தையும் அப்லோட் செய்ய சொல்லியது. அதன்படியே அதை செய்தேன். 

தொடர்ந்து சில கண்டீஷன்கள் எனக்கு சொல்லப்பட்டது. உதாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் கடன் வேண்டும் என்றால் அதில் 1300 ரூபாயை அந்த நிறுவனம் பிடித்தது போக மிச்சம் இருக்கும் பணத்தை எனக்கு கிரெடிட் செய்யும். அதனை நான் வாங்கிய ஏழு நாட்களுக்குள் வட்டி மற்றும் ஜி.எஸ்.டி வரியோடு திருப்பி செலுத்த வேண்டும். வாங்கிய நாளிலிருந்து ஏழாம் நாள் கட்டலாம் என்று இருந்தால் அன்று காலையே அந்த நிறுவனத்தினர் போன் செய்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். பத்து மணிக்கு ஒரு எச்சரிக்கை, நான்கு மணிக்கு ஒரு எச்சரிக்கை என மிரட்டுவார்கள்.

‘நீ கடன் வாங்கி ஏமாத்திட்டான்னு, உன் சொந்தக்காரங்க கிட்ட சொல்லுவோம்’, ‘உன் போன்ல இருக்குற CONTACTS வெச்சு ஒரு வாட்ஸ் அப் குரூப் ரெடி பண்ணி இருக்கோம். அதுல உன் போட்டோவ FRAUDனு ஷேர் பண்ணுவோம்’ என்பது மாதிரியான மிரட்டல்களை சந்திக்க வேண்டியிருக்கும். 

என்னிடம் பணம் இல்லாததால் வெவ்வேறு லோன்-ஆப்களை பயன்படுத்தி நிலையை சரி செய்ய முயன்றேன். இருந்தாலும் கடைசி வரை அந்த கடனை என்னால் அடைக்க முடியவில்லை.

ஒண்ணு மாற்றி ஒண்ணு என போய்க் கொண்டே இருந்தது. ஒருமுறை 40 ஆயிரம் ரூபாய்க்கு நகையை அடமானம் வைத்து கூட லோன்-ஆப்பில் வாங்கிய கடனை அடைத்துள்ளேன். 

ஒரு நிமிடம் தவறினால் கூட வார்த்தையும், பேசுகின்ற தொனியும் வேறு மாதிரி இருக்கும். எனது உடன் பிறந்த சகோதரனுக்கே போன் செய்து நான் கடன் வாங்கிய விஷயத்தை சொல்லி என்னை அவமான படுத்தினார்கள். அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் தகாத வார்த்தைகளால் அவனை ஏசியுள்ளனர்.

ஐயாயிரம் ரூபாயில் ஆரம்பித்து அப்படியே சுமார் நான்கு லட்ச ரூபாய் வரை எனது லோன்-ஆப் கடன் நீண்டுவிட்டது. எனக்கு ஒரு கட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த அப்ளிகேஷனில் வாங்கிய கடன் அதை அடைக்கவே பயன்பட்டதே தவிர எனக்கு பயன்படவே இல்லை.

யாரிடமும் எனது பிரச்னையை சொல்ல முடியாத தர்ம சங்கடமான நிலை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கே சென்று விட்டேன். இருப்பினும் என்னை நம்பி குடும்பம் இருந்ததால் அதை தவிர்த்து விட்டேன். 

கடைசியில் சைபர் குற்ற வழக்குகளை கையாளும் வழக்கறிஞர் ஒருவரிடம் எனது நிலையை சொன்னேன். அவர் தான் இந்த அப்ளிகேஷன்கள் எல்லாம் ஏமாற்றுக்காரர்கள் என சொன்னார். அதோடு சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் சொன்னார். கூடவே இவர்கள் எல்லாம் அரசால் அங்கீகரிக்கப்படாதவர்கள் என சொன்னார். பிறகு தான் அது பித்தலாட்ட வேலை என எனக்கு புரிந்தது. 

அதையடுத்து எனது CONTACT இல் இருந்த அனைவருக்கும் எனது நிலையை சொல்லிவிட்டு நான் என் வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். 

இந்த நான்கு மாதங்களாக தூக்கம் என்பதையே மறந்திருந்தேன். வீட்டில் இப்போது தான் இந்த விஷயத்தை சொன்னேன். இப்போது கூட இதை உங்களிடம் நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால் என்னை போல யாரும் இதில் சிக்கி கொள்ள வேண்டாம் என்பதற்காக தான் சொல்கிறேன். இது தொடர்பாக நான் சைபர் கிராமில் புகாரும் கொடுத்துள்ளேன். 

ஆன்லைன் ரம்மி போல தான் இந்த லோன்-அப்ளிகேஷனும். தமிழக அரசு விரைவாக இதில் கவனம் செலுத்தி தீர்வு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி, கந்து வட்டி என அழிந்த குடும்பங்கள் இனி வரும் நாட்களில் லோன்-அப்ளிகேஷனால் அழியும்” என தெரிவித்துள்ளார்.

அரசு இதில் தலையிட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே லோன்-அப்ளிகேஷனால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், வடிவழகிய நம்பி கூறும்போது, "ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு பிரைவசி என்பதே இல்லை. நீங்கள் எந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தாலும், கூகுள் கணக்கில் இணைக்க வேண்டும். ஏற்கெனவே நமது செல்போனில் வைக்கப்பட்டிருக்கும் எண்கள், கூகுளின் இமெயில் முகவரியில் சேமித்து வைத்திருப்போம். அந்த தகவலைதான், ஆப் மூலம் லோன் வழங்கும் நிறுவனங்கள் திருடி, உங்கள் உறவினர்களுக்கு கால் செய்து தன்மானத்தை உரசிப் பார்க்கின்றன. நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கடன் பெறும்போது, பத்திரத்தில் உள்ளவற்றைப் படித்துப்பார்த்து கடன் வாங்குவீர்கள், கையெழுத்து போடுவீர்கள். அதில், சில தரவுகள் உங்களுக்கு திருப்தியில்லை என்றால் கடன் பெறமாட்டீர்கள். ஆனால், ஆப்-பில் நீங்கள் Agree என்ன அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். எனவே, உங்களை அவர்களின் சட்டதிட்டத்துக்கு கட்டாயமாக வற்புறுத்துகிறார்கள். முதலில், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். பின்பு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 -இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேலும், இதுபோன்ற நிறுவனங்கள் உங்கள் செல்போனில் உள்ள புகைப்படங்களைக் கூட எடுக்கலாம். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கிறார்.