இந்தியா

மாயாவதி, பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்வார் - நசீமுதீன் சித்திக்

webteam

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மாயாவதி, பாரதிய ஜனதாவுடன் கைகோர்த்துக் கொள்வார் என்று பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த நசீமுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா என்ற இடத்தில் நசீமுதீன் சித்திக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதாவுடன் இணைந்து செயல்படுமாறு பகுஜன் சமாஜ் கட்சிக்கு கடுமையான அழுத்தம் தரப்படும் என்று கூறினார். அதன் விளைவாக மாயாவதி பாரதிய ஜனதாவுடன் சென்றுவிடுவார் என நசீமுதீன் சித்திக் குறிப்பிட்டார். 

அதன்பிறகு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேறு வழியின்றி காங்கிரசுடன் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் சித்திக் தெரிவித்தார். மாயாவதி பிரதமராக வாய்ப்புள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நசீமுதீன், அவரது கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியே அதுபற்றி எதுவும் கூறவில்லை என்று கூறினார். 

அடுத்த பிரதமராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் வருவார் என்று மட்டுமே அகிலேஷ் யாதவ் கூறியதாக சித்திக் குறிப்பிட்டார். மாயாவதியின் அரசில் அமைச்சராக இருந்த நசீமுதீன் சித்திக், கடந்த ஆண்டு அவருக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பி, பிறகு காங்கிரசில் இணைந்தவர்.