இந்தியா

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு

webteam

’’தேர்தலுக்குப் பிந்தைய பல கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் நேற்று கலந்துகொண்ட அவர் கூறும்போது, ‘’தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், சரியான முடிவுகளாக இருந்ததில்லை. அதைப் புரிந்துகொள்ள வேண்டும். 1999-ஆம் ஆண்டில் இருந்தே இந்தக் கணிப்புகள் பெரும்பாலும் தவறாக இருந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நடக்கும் 23 ஆம் தேதி வரை, எல்லோரும் தங்கள் சொந்த நம்பிக்கைகளையே வெளிப்படுத்துவார்கள். அதனால் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளிவரும் வரை காத்திருக்க வேண்டும். மத்தியிலும் மாநிலங்களிலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலையான அரசு அமைய வேண்டும். அதுதான் தேவை. அவ்வளவுதான்.

ஜனநாயகம் வலுப்பட வேண்டுமென்றால் அரசியல் கட்சிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அண்மைக் காலமாக, அரசியல் தலைவர்களில் பேச்சில் நாகரிகம் குறைந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படையை மறந்துவிடுகின்றனர். அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஏதும் செய்யாமல், கடைசி நேரத்தில் இலவசங்களை அறிவிக்கின்றன. அதை நான் எப்போதும் எதிர்க்கிறேன்’’ என்றார்.