மக்களவைத் தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியாகி உள்ளன. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு மொத்தமாக 42 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாகவே மேற்கு வங்கம் பார்க்கப்படுகிறது.
மூன்றாவது அணிக்கான முயற்சியும் நடந்து வரும் நிலையில், மம்தா பானர்ஜி அதிகம் கவனிக்கப்படும் நபராகவே அறியப்படுகிறார். இந்நிலையில், மேற்குவங்கத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கருத்துக் கணிப்பு முடிவுகளில் கிடைத்துள்ளன என்பதை பார்ப்போம்.
ஏபிபி நியூஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், திரிணாமூல் காங்கிரஸ் 24 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சி-ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், திரிணாமூல் காங்கிரஸ் 29 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா நியூஸ் கருத்துக் கணிப்பின்படி, திரிணாமூல் காங்கிரஸ் 26 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பின்படி, திரிணாமூல் காங்கிரஸ் 28 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 11 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பின்படி, திரிணாமூல் காங்கிரஸ் 29 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இடத்திலும், தேசிய ஜனநாயக கூட்டணி 11 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
என்டிவிவி நடத்திய கருத்துக் கணிப்பில், திரிணாமூல் காங்கிரஸ் 24 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடத்திலும், பாஜக 14 இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 2 இடத்திலும், பாரதிய ஜனதா 2 இடத்திலும், காங்கிரஸ் 4 இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை பாஜக வெறும் இரண்டு இடங்களை கைப்பற்றிய நிலையில், தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்தும் பாஜக பத்துக்கும் மேற்பட்ட இடங்களை மேற்குவங்கத்தில் பிடிக்கும் என தெரிவிக்கின்றன.
இதனிடையே தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன். ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை மாற்றவோ அல்லது இயந்திரங்களை மாற்றவோ தான் இந்தத் திட்டம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன், வலிமையுடன், உறுதியாகவும் இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து போரிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.