வெள்ள மீட்பு பணிக்காக இந்திய விமானப்படைக்கு தரவேண்டிய 113 கோடியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று கேரள அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்கி புயல் கேரளாவை தாக்கியது. அப்போது கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்தது. அதேபோல கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த பருவமழையால் அம்மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த இரண்டு காலங்களிலும் கேரளாவில் மீட்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை உதவியது. இந்தப் பணிகளுக்கு இந்திய விமானப்படைக்கு 113 கோடி ரூபாய் செலவானதாக தெரிகிறது. இதனையடுத்து இந்தக் கட்டணத்தை திரும்பி செலுத்தும்படி மத்திய அரசு கேரள அரசிடம் கேட்டுள்ளது.
இந்நிலையில் இந்தக் கட்டண தொகையை திரும்ப செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கேரளாவில் நடைபெற்ற மீட்பு பணிகளுக்கான செலவான 113 கோடி ரூபாய்க்கான ரசீதை விமானப்படை அனுப்பியுள்ளது. இந்தக் கட்டணத்தை திரும்பி செலுத்துவதிலிருந்து எங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும்.
ஏனென்றால் கேரளாவில் ஏற்பாட்ட பாதிப்புகள் சரி செய்யவே போதிய நிதியில்லை. இங்கு நடைபெற்ற மொத்த சேதத்திற்கான மதிப்பு 31ஆயிரம் கோடியாக ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது. ஆனால் தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து எங்களுக்கு இதுவரை 2,904 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே கேரளாவில் பாதிப்பை சரி செய்யும் பணிக்கே போதிய நிதியில்லை. எனவே இந்தக் கட்டண தொகையை திரும்ப செலுத்துவது கேரள அரசிற்கு மேலும் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மீட்பு பணிகளுக்கு ஏற்பட்ட செலவு 102 கோடி ரூபாய் என்று மத்திய அரசு ரசீது அனுப்பியுள்ளது. மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்த எழுத்துபூர்வமான பதில் மூலம் இது தெரியவந்துள்ளது.