2016ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற இந்திய கபடி அணியில் ஒரு வீரராக இடம்பிடித்து விளையாடியவர், தீபக் நிவாஸ் ஹூடா. இவர், புரோ கபடி லீக்கிலும் விளையாடியுள்ளார். அர்ஜுனா விருதைப் பெற்றிருக்கும் இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள மெஹாம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில், இவருக்கும் முன்னாள் உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூராவுக்கும் 2022இல் திருமணம் நடைபெற்றது.
இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம், தீபக் ஹூடா மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னைத் தாக்கியதாக பூரா போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தீபக் ஹூடா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்து கேட்டு மனுத் தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் குடும்ப விவகாரம் குறித்து, கடந்த மார்ச் 15ஆம் தேதி ஹரியானாவின் ஹிசாரில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருதரப்பிலும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூரா, ஒருகட்டத்தில் எழுந்துபோய் கணவர் ஹூடாவைத் தாக்குகிறார்.
இந்தக் காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, தீபக் ஹூடா மனைவி பூராவிடம் சொகுசு கார் ஒன்றைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த விவகாரம் வெடித்திருப்பதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.