இந்தியா

“அர்ச்சனா குப்தாவை சுட்டது முன்னாள் எம்.எல்.ஏ துப்பாக்கிதான்” - காவல்துறை

webteam

பீகார் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு சிங் தனது பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு கையில் துப்பாக்கியுடனும் மற்றொரு கையில் மதுவுடனும் நடனமாடியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரும் பீகார் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜு சிங் புத்தாண்டின் போது டில்லியில் உள்ள தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். அந்த விருந்தை ராஜு சிங் அவரது சகோதரர்களுடன் இணைந்து கொடுத்துள்ளார். விருந்தில் மது அருந்தி நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

அப்போது சுமார் 12 மணியளவில் ராஜு சிங் தனது துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாக தெரிகிறது. இதில் அர்ச்சனா குப்தா என்ற பெண் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் தலையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கியால் சுட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விருந்து நடைபெற்ற பண்ணை வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அங்கிருந்து ராஜு சிங்கும் அவரது டிரைவரும் தப்பி சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பேர் ராஜு சிங்கிற்கு எதிராக சாட்சி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உத்திரபிரதேசம் குஷிநகர் விரைந்து சென்று போலீசார் ராஜு சிங்கையும் அவரது டிரைவர் ஹரிசிங் என்பவரையும் கைது செய்தனர். 

இந்நிலையில், தற்போது எம்.எல்.ஏ. ராஜு சிங் தனது பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு கையில் துப்பாக்கியுடனும் மற்றொரு கையில் மதுவுடனும் நடனமாடியுள்ள சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளதாக காவல் துணை ஆணையாளர் விஜய்குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற போது இரண்டு பேர் துப்பாக்கி வைத்திருந்தனர். அதில் அர்ச்சனா குப்தா மீது பாய்ந்த குண்டுகள் ராஜு சிங்கின் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே அர்ச்சனா குப்தாவின் சிறுநீரகங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன. 45 வயதுடைய நபர் ஒருவருக்கும் 67 வயதுடைய பெண்மணி ஒருவருக்கும் குப்தாவின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.