இந்தியா

குரங்கு பட்டம் விட்டு பார்த்திருக்கிறீர்களா ?

jagadeesh

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு வினோத நிகழ்வுகள் நாள்தோறும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மனிதர்கள் எல்லாம் வீட்டிலேயே முடங்கி போயிருக்க எந்தத் தொந்தரவும் இல்லாமல் விலங்குகள் வெளியே சுதந்திரமாக நடமாடி வருகின்றன.

இந்தியாவில் இதுவரை 12,380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சைப் பெற்ற 1,480 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக 414 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் அதிகளவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முதல்கட்டமாக மார்ச் 25-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும், இப்போது இந்த ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பலரும் வீட்டிலேயே தொலைக்காட்சியின் முன்பும் செல்போனின் முன்பும் பொழுதை கழித்து வருகின்றனர். சிலர், மாலை நேரங்களில் தங்கள் வீட்டு மாடிகளில் பட்டம் விட்டு பொழுதை போக்குகின்றனர்.

டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற பெரு நகரங்களில் இளைஞர்களுக்கு பட்டம் விடுவதே பெரும் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இப்போது மனிதர்கள் விடும் பட்டத்தை குரங்கும் விட தொடங்கியதும்தான் ஆச்சரியம். அப்படியொரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இந்திய வனத்துறை அதிகாரியான சசாந்தா நந்தா. குரங்கு பட்டம் விடும் வீடியோவை பகிர்ந்த அவர், "இந்த உலகம் எவ்வளவு வேகமாக மாற்றத்தை சந்தித்து வருகிறது, நிச்சயமாக இது குரங்குதான்" என தெரிவித்திருக்கிறார்.