கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் screenshot
இந்தியா

’ட்ரம்ப்பே எங்களை காப்பி அடிக்கிறார்..’ கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பெருமிதம்!

அமெரிக்காவே தங்களுடைய திட்டங்களை தான் காப்பியடித்து செயல்படுத்துகிறது என கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த 5,000 டாலர் திட்டம், கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களின் நகலாகும் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் குடியரசு கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும், 5,000 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 4.79 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் மாநாட்டில் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தசூழலில் இதை மேற்கோள் காட்டி பேசியிருக்கும் கர்நாடக மாநில முதல்வர் டிகே சிவக்குமார், கர்நாடகாவின் பெண்களுக்கான இலவச மற்றும் மாத உதவித்தொகை திட்டங்களை குறிப்பிட்டு நம் திட்டங்களை அமெரிக்காவே காப்பியடித்துள்ளதாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் பேசியிருக்கும் அவர், “மகாராஷ்டிரா எங்களைப் பார்த்து காப்பி அடித்தது. மத்தியப் பிரதேசம் எங்களைப் பார்த்து காப்பி அடித்தது. ராஜஸ்தான் எங்களைப் பார்த்து காப்பி அடித்தது. பீகார் எங்களைப் பார்த்து காப்பி அடித்தது. இப்போது டிரம்ப் எங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார். பார்த்தீர்களா? 5,000 டாலர்கள். எவ்வளவு? 5,000 டாலர்கள். இப்போது, ​​யார் இந்த காப்பியை வெளியிடுகிறார்கள்? வாக்களித்தால் இவ்வளவு டாலர்கள் கொடுப்பேன் என்று டிரம்ப் கூறுகிறார். இதன் அர்த்தம், நமது சிந்தனை இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம்" என்று சிவகுமார் கூறினார்.