இந்தியா

தீவிரவாத அச்சுறுத்தலிலும் 2 லட்சம் பேர் பனிலிங்க தரிசனம்

webteam

தீவிரவாத அச்சுறுத்தலிலும் தற்போது வரை 2 லட்சத்து 2 ஆயிரத்து 705 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வது வழக்கம். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கு முன்பு இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரியை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8பேர் பலியானியர். 

பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் சிறப்பாக செயல்பட்டதால் பலரது உயிர் காப்பாற்றப்பட்டது. இதையடுத்து அங்கு மேலும் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் இருந்தாலும் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஏற்கெனவே 16 குழுவினர் அமர்நாத் சென்று திரும்பிய நிலையில் நேற்று 3,603 பக்தர்கள் அடங்கிய 17-வது குழுவினர் ஜம்முவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். யாத்திரை தொடங்கிய நாளில் இருந்து இதுவரை  2,02,705 பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.