இந்தியாவில் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் 2027 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில், சுமார் 35 லட்சம் பெட்ரோல் வாகனங்களுக்குப் பதிலாக புதிய மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 2030 ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவில் இந்தியாவிற்கு சுமார் ₹1 லட்சம் கோடி வரை மிச்சமாகும் என்று பாரத ஸ்டேட் வங்கி தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 20 சதவீதத்தை எட்டினால், இந்த மிகப்பெரிய அளவிலான சேமிப்பு சாத்தியமாகும். தற்போது (2026-ல்) இதன் பங்களிப்பு 8 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நடப்பு ஆண்டில் மின்சார வாகனங்களின் பதிவு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் மாதத்திற்கு சராசரியாக 1.3 லட்சமாக இருந்த EV பதிவுகள், தற்போது (மார்ச் - ஜூன் காலகட்டத்தில்) மாதத்திற்கு 2.3 லட்சமாக அதிகரித்துள்ளன. உலகளாவிய அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக, நுகர்வோரின் கவனம் மின்சார வாகனங்கள் (இருசக்கர, முச்சக்கர மற்றும் கார்கள்) பக்கம் வேகமாகத் திரும்பியுள்ளது.
மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்தாலும், அதற்கேற்ப சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்று எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இந்தியாவில் 29,151 பொது சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இதில் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இரு மாநிலங்கள் மட்டுமே 35% பங்கைக் கொண்டுள்ளன.
நாட்டில் தற்போதுள்ள சார்ஜிங் நெட்வொர்க்கில் 30% மட்டுமே அதிவேக சார்ஜர்களாக உள்ளன. இருப்பினும், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிலையங்களில் அதிவேக சார்ஜிங் வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார வாகனக் கடன்களுக்கான உத்திரவாத நிதி உருவாக்குதல், சார்ஜிங் நிலையங்களுக்கு சலுகை விலையில் நிலம் வழங்குதல் மற்றும் அடுத்த 10-15 ஆண்டுகளுக்கான நீண்டகால தேசிய வரைபடக் கொள்கையை உருவாக்குவது அவசியம் என இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.