இந்தியா

ஊரடங்கால் வேலை இழந்த இஎஸ்ஐ பயனாளிகளுக்கு 50% ஊதியம் வழங்க முடிவு!

JustinDurai
இஎஸ்ஐ திட்ட பயனாளிகள் ஊரடங்கு காலத்தில் வேலை இழந்திருந்தால், அவர்கள் 50 சதவீத ஊதியத் தொகையை நிவாரணமாக பெறும் வகையில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தில் (ESIC) பதிவு செய்துள்ள தொழிலாளர்கள், திடீரென்று வேலை இழக்க நேரிட்டால் 'அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் அவர்கள் கடைசியாக பெற்றுவந்த ஊதியத்தின் 25% தொகை, மூன்று மாதத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றது.
 
தற்போது அந்த விதிமுறை தளர்த்தப்பட்டு, தொழிலாளர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீத தொகையை 3 மாதங்களுக்கு வழங்குவதற்கு வகைசெய்யும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
 
ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரையான காலத்தில் இஎஸ்ஐ பங்களிப்பை செலுத்திய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த அலவன்ஸ் தொகை கிடைக்கும். மார்ச் 24 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையான காலத்துக்காக இந்த அலவன்ஸை பெறலாம்.
 
ஊழியர்கள் இஎஸ்ஐ உறுப்பினர்களாக 2 ஆண்டுகள் இருந்திருக்கவேண்டும். இந்த நடவடிக்கை மூலம் 30 லட்சம் முதல் 35 லட்சம் ஊழியர்கள் பயனடைவர் என்று பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசிய செயல் உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இந்த திட்டத்தில் நிவாரணம் கோரும் கால அவகாசத்தை ஜூன் 30, 2021 வரை நீட்டித்துள்ளது ESIC.  இந்த முடிவானது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்டது.