புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளையும் பொருளுக்கோ மத்திய அரசு, புவிசார் குறியீடு வழங்குகிறது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.
அதில் சங்க காலத்தில் இருந்து மஞ்சள் பயிரிடும் பழக்கம் தமிழகத்தில் இருந்து வருவதாகவும், மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள், ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக பயிரிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட புவிசார் குறியீடு பதிவுத்துறை, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. அதைதொடர்ந்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வைகான் மஞ்சள், ஒடிஷாவின் கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் விளையும் மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.
ஈரோடு மஞ்சளைப் போலவே தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.