இந்தியா

கொரோனா 2-ஆம் அலை: பிஎஃப் கணக்கில் இருந்து முன்பணம் எடுக்க மீண்டும் அனுமதி

jagadeesh

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா முதல் அலை பாதிப்பின்போது பல்வேறு தரப்பு மக்களுக்கு பொருளாதார சிக்கல் இருந்ததால், பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதிவிதம் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் இந்தாண்டு பிஎஃப் பணத்தை எடுக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இது குறித்து மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில் "கொரோனா முதல் அலையின்போது 'பிரதமரின் கரீப் கல்யாண் யோஜ்னா' திட்டத்தின் ஒரு பகுதியாக வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் எடுக்கும் சிறப்புத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச்சில் அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா 2-வது அலையில் தொழிலாளர்களின் நலன் கருதி அதே சிறப்புத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுகிறது"

"இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 3 மாத அடிப்படை ஊதியம் அல்லது 75 சதவீத வைப்பு தொகை, இதில் எது குறைவோ அந்த தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இதைவிட குறைவான தொகையை எடுக்கவும் விண்ணப்பிக்கலாம். கொரோனா சிறப்பு முன்பணம் எடுக்கும் திட்டம் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்களுக்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக ரூ.15,000-க்கும் குறைவான மாத ஊதியம் பெறுவோர் பெரிதும் பயனடைவர். இந்த திட்டத்தில் இதுவரை 76.31 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ரூ.18,698.15 கோடி வழங்கப்பட்டுள்ளது"

"முதல் கொரோனா அலையின்போது இபிஎஃப் நிதியில் இருந்து முன்பணம் எடுத்தவர்கள் இப்போதும் முன்பணத்தை எடுக்கலாம். தற்போதைய நடைமுறைகளின்படி விண்ணப்பித்த 20 நாட்களில் பணம் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோானா கால நெருக்கடியை கருத்தில் கொண்டு விண்ணப்பித்த 3 நாட்களில் முன்பணம் வழங்க இபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ளது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.