இந்தியா

தமிழகம் - கர்நாடகா இடையே சுமுக முடிவு எட்டினால்தான் மேகதாது அணை - மத்திய அரசு உறுதி

webteam

மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகா இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுசூழல் அனுமதி வழங்குவோம் என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.

மேகதாது அணையின் திட்டம் எந்த அளவில் இருக்கிறது என கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, "மத்திய அரசுக்கு கிடைக்கப் பெற்ற சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், மேகதாது அணை கட்டப்பட்டால் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும் என்றும் அதில் 2,925.5 ஹெக்டேர் நிலம், காவிரி வன உயிரி சரணாலயமும், 1,869.50 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஆகும்.

அதேபோல் சங்கமா, கொங்கிட்டோடி, மடவாளா, முத்ததி,பொம்மசந்தரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும்" எனக் கூறினார்.மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே சுமுகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுசூழல் அனுமதி வழங்க முடியும் என நிபுணர் மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் மேகதாது அணையின் உத்யேச திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட பின்னரே குறிப்பு விதிமுறைகளுக்கான (Trems of Reference) முன்மொழிவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.