மில்லா மேகி இன்ஸ்டா
இந்தியா

தெலங்கானா உலக அழகிப் போட்டி | ”நாங்க விலைமாதோ, குரங்கோ அல்ல” இங்கிலாந்து அழகி பகீர் குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம்சாட்டியுள்ளார்.

Prakash J

தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72ஆவது உலக அழகிப் போட்டி (Miss World) நடைபெற்று வருகிறது. கடந்த மே 10ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டு சார்பாக பங்கேற்ற அந்நாட்டு அழகி மில்லா மேகி, போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். போட்டியில் பங்கேற்பதற்காக, தெலங்கானாவுக்கு கடந்த மே 7ஆம் தேதி வந்த அவர், குடும்பச் சூழ்நிலையின் காரணமாக, நாடு திரும்புவதாக கடந்த 16ஆம் தேதி இங்கிலாந்து சென்றார்.

இந்த நிலையில் அவர் அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், “போட்டியில், இரவு முழுவதும் அவர்களை மகிழ்விக்கவே, நாங்கள் அமர்த்தப்பட்டோம். இது மிகவும் தவறானது. வித்தை காட்டும் குரங்குகளைப்போல அங்கு நாங்கள் அமர்ந்திருந்தோம். அவர்களின் பொழுதுபோக்குக்காக நாங்கள் சுரண்டப்படுவது ஏற்றுக்கொள்வதாய் இல்லை. சுரண்டப்படுவதற்காக யாரும் இங்கு வரவில்லை.

உலக அழகிப் பட்டத்துக்கென ஒரு தனிமதிப்பு இருக்க வேண்டும். ஆனால், அங்கு நான் ஒரு விலைமாதுவாக உணர்ந்தேன். ஆகையால்தான், ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும்வகையிலும், இளைஞர்களை ஊக்குவிக்கவும் போட்டியில் இருந்து விலகினேன். இதுபோன்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

இருப்பினும், மில்லாவின் குற்றச்சாட்டை மறுத்த போட்டி அமைப்பான மிஸ் வேர்ல்டு, ஆதாரமற்ற, பொய்க் குற்றச்சாட்டுகளை மில்லா பரப்பி வருகிறார் எனத் தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்த அழகிப் போட்டியில் அவருக்குப் பதிலாக யுனைடெட் கிங்டமைச் சேர்ந்த மற்றொரு அழகு ராணி போட்டியில் இடம்பெற்றுள்ளார்.