opposition party leaders PT Web
இந்தியா

4 மணி நேரம் வரை நீடித்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்: மம்தா முதல் நிதிஷ் வரை பேசியது என்ன?

பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு 2வது சுற்று கூட்டம் அடுத்த மாதம் ஹிமாச்சலில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash J

பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று அக்கட்சித் தலைவர்களுடன் இணைந்து (ஜூன் 23) பாட்னாவில் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார். இதில், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ஆம் ஆத்மி எனப் பல முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பாஜக அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

”ஒற்றுமையுடன் இருக்கிறோம் நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்கப் போகிறோம். எங்களை எதிர்க்கட்சிகள் என்று அழைக்காதீர்கள். எங்களை நாட்டின் குடிமக்கள் என்று அழையுங்கள். நாங்கள் பாரத மாதாவின் மகன்கள், மகள்கள் என்று அழையுங்கள். எங்கள் பாரத மாதாவை காப்பாற்ற, நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம். மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

மம்தா பானர்ஜி

அதைத் தடுக்க இந்த அரசு ஏதாவது செய்ததா? ராஜ்பவன் ஆட்களை வைத்து தனியாக ஆட்சி நடத்துவதைத்தான் இந்த மத்திய அரசு நடத்தி வருகிறது. எந்த விஷயத்திலும் மாநில அரசுகளை இவர்கள் கலந்து ஆலோசிப்பதில்லை. சிபிஐ, ஈடி வைத்து மிரட்டுகிறார்கள். விவசாயிகள் சட்டத்தில் என்ன நடந்தது? ஒரு வருடம் தொடர்ந்து போராடித்தான் வெற்றி பெற முடிந்தது. இந்த அரசிடம் எல்லாவற்றிற்குமே போராட வேண்டி இருக்கிறது”.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி

”காந்தியை தூக்கி எறிந்து விட்டு கோட்சேவை கொண்டு வந்து வைக்க முயற்சிக்கிறார்கள்”.

மகாராஷ்டிரா மாநிலம் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே

”காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கட்சிகள் ஓரணியில் ஒன்று திரண்டு உள்ளோம் தற்போது நாடு உள்ள நிலையில் இப்படி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது என்பது மிகவும் அவசியமாகிறது வரக்கூடிய நாட்களில் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்று நம்புகிறேன்”.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் :

”ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு கிடைத்ததுபோல இந்த ஒருங்கிணைந்த முன்னணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்”.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா :

”காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள 17 கட்சிகள் ஒருங்கிணைந்து வந்துள்ளது. ஆட்சி அதிகாரத்துக்காக அல்ல, மாறாக கொள்கைக்காக.

அடுத்தக்கட்ட ஆலோசனை

பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சி தலைவர்கள் இணைந்து பேட்டியளித்துள்ளனர். இன்றைய பேச்சுவார்த்தையில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அனைவரும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் 2வது சுற்று கூட்டம் அடுத்த மாதம் ஹிமாச்சலில் நடைபெற இருப்பதாகவும், ஹிமாச்சல் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமையேற்று நடத்த இருப்பதாகவும், மல்லிகார்ஜுன கார்க்கே தலைமை தாங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.