model image reuters
இந்தியா

‘வேலையில் மனஅழுத்தத்தோடு இருந்த ஊழியர்கள் பணிநீக்கம்’ - வைரலான இமெயில்.. விளக்கம் கொடுத்த நிறுவனம்!

பணி நீக்கம் தொடர்பாக, மின்னஞ்சல் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அதற்கு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Prakash J

டெல்லி - NCRஐ தலைமையிடமாக கொண்டு செயல்படும் சலூன் ஹோம் சர்வீஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘யெஸ் மேடம்’, சமீபத்தில் பணிச்சுமை காரணமாக ஏற்படும் மன அழுத்தம் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்காக இந்த நிறுவனம் தன்னுடைய ஊழியர்கள் மத்தியில் நடத்திய ஆய்வின்போது, தங்களுக்கு மன அழுத்தம் இருப்பதாக சொன்ன ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக இணையத்தில் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மனிதவள மேலாளர் (HR) அனுப்பியதாகக் கூறப்பட்ட மின்னஞ்சலில்,

அன்புள்ள குழுவிற்கு,

சமீபத்தில், வேலையில் ஏற்படும் மனஅழுத்தத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளை புரிந்துகொள்ள நாங்கள் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதில், பலர் உங்களுடைய கவலைகளைப் பகிர்ந்துள்ளீர்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதில் உறுதிபூண்டுள்ள இந்நிறுவனம், உங்களின் கருத்துகளை கவனமாகப் பரிசீலித்தது. பணியிடத்தில் யாரும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மன அழுத்தம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஊழியர்களை விடுவிப்பதற்கான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது, மேலும் இதுகுறித்த விவரங்களும் வெளிவரும். உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி.

அன்புடன்,

மனிதவள மேலாளர், யெஸ் மேடம்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, எதிர்வினைகள் எழுத்தொடங்கின. இதற்கிடையே பணி நீக்க மின்னஞ்சல் தொடர்பாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “மன அழுத்தம் குறித்த கணக்கெடுப்பில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதாக கூறியவர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை. அவர்களை மீட்டெடுக்க ஒரு சிறிய இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஓய்வெடுக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளோம். அவர்கள் ஓய்வெடுக்க வலியுறுத்தியுள்ளோம்” என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், “அவர்களை நாங்கள் கைவிடவில்லை, அவர்களின் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நேரம் அளித்து, அவர்களை ஊக்கப்படுத்தி இருக்கிறோம்” என அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊழியர்கள் மன அழுத்தத்துடன் இருந்ததற்காக நாங்கள் பணிநீக்கம் செய்ததாக பரவும் சமூக ஊடகப் பதிவுக்காக நாங்கள் மனம் வருந்துகிறோம். அதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம் என தெளிவாக கூறிக்கொள்கிறோம். எங்கள் குழு எங்கள் குடும்பம்போல. அவர்களின் தியாகம், கடின உழைப்பு மற்றும் முனைப்புதான் எங்கள் வெற்றிக்கான அடித்தளம். பணியிடங்களில் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறிப்பிட்டுக் காட்ட திட்டமிட்டு, விளையாட்டாகவே அது வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு சீரியஸாக கமென்ட் வந்தது. இருப்பினும் அந்த கமெண்ட்களை செய்தவர்கள், வலுவான கருத்துகளைத் தெரிவித்தவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.