டிசிஎஸ், இன்போசிஸ், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிர்வாகச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது, ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 13 கோடி ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் மட்டும், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 2 கோடி பேர் மறைமுகமாகவும் இத்துறையில் வேலை பார்க்கின்றனர். கடந்த ஆண்டு உலக அளவில் சுமார் 1115 நிறுவனங்களில் இருந்து 2 லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
நடப்பாண்டின் 8 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் மட்டும் இந்தியாவில் 12 ஆயிரம் ஊழியர்களையும், ஆரக்கிள் நிறுவனம் ஆயிரத்து 500 பேரையும் பணிநீக்கம் செய்துள்ளன. இன்போசிஸ், சி.டி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்த வருடத்தில் குறிப்பிட்ட அளவில் பணியாளர்களை நீக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சமீப காலமாக ஐடி துறையில் நிலவும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் காரணமாக, ஊழியர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித உழைப்பின் தேவையை குறைப்பதே இதற்கு முக்கிய காரணம் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் ஊழியர்களை எளிதில் பணிநீக்கம் செய்ய முடியாத நிலையில், இந்தியாவில் ஐடி ஊழியர்களுக்கு வேலை பாதுகாப்புக்கான சட்டங்கள் இல்லாதது கவலை அளிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.