எலான் மஸ்க் ட்விட்டர்
இந்தியா

இந்தியாவில் கால்பதிக்கும் டெஸ்லா நிறுவனம்.. வேலைவாய்ப்பு அறிவிப்பு!

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்கு சான்றாக டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பு அமைந்துள்ளது.

PT WEB

சமூக வலைதளமான லிங்க்டன் (LINKEDIN) தளத்தில் மும்பையை மையமாக வைத்து 13 முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் விற்பனை ஆலோசகர், நுகர்வோருக்கான ஆதரவு நிபுணர், சேவை மேலாளர், நுகர்வோர் மேலாளர், வணிக செயல்பாடு ஆய்வாளர், கடை மேலாளர், உதரிபாகங்களுக்கான ஆலோசகர், வாடிக்கையாளர்களுக்கான மேற்பார்வையாளர் உள்ளிட்ட வேலைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

டெஸ்லா நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. இந்தியாவில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய கடும் முயற்சிகளை டெஸ்லா நிறுவனம் மேற்கொண்டபோது, மத்திய அரசின் அதிகப்படியான இறக்குமதி வரி அதற்கு முட்டுக்கட்டையாக அமைந்தது.

இந்தச் சூழலில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களுக்கான வரிகள் கணிசமாக குறைக்கப்பட்டன. இது முதற்காரணம் என்றாலும், அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் சந்தித்து பேசியிருந்தார். அப்போது தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இருவரும் விவாதித்தனர். இவை எல்லாம் தான் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு காராணமென கூறப்படுகிறது.

டெஸ்லா கார்கள்

இந்திய சந்தைகளில் மின்சார வாகனங்கள் மெல்லமெல்ல வலம்வரத் தொடங்கி இருக்கும் சூழலில், டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிப்புகள் வருகை தரும்போது வர்த்தகம் அதிகரிப்பதுடன், அது சுற்றுச்சூழலுக்கும் பெரும் நன்மையை தரக்கூடுமென கருதப்படுகிறது. மின்சார வாகனங்கள் மட்டுமின்றி ஸ்டார்லிங்க் இணைய சேவையையும் இந்தியாவில் விரிவுபடுத்த அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவது கூடுதல் தகவல்.