பிஹாரைத் தொடர்ந்து டெல்லியிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அம்மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் மூலம் 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாக பீகாரில் இருந்த வாக்காளர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதையடுத்து, மக்களின் வாக்களிக்கும் உரிமைகள் பாதிக்கப்படுவதாக வாக்களர் திருத்தப் பணிகள் மீது எதிர்ப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், இதற்கு பதிலளித்திருந்த தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையாகவும், துல்லியமாகவும் வாக்காளர் திருத்தப் பணிகள் நடைப்பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தது. இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விவாதங்கள் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில்தான், தலைநகர் டெல்லியிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள அம்மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எவ்வாறு கையாளுவது, பட்டியலைச் சரிபார்க்கும் முறைகள் தொடர்பாக அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பணிகளுக்காக காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப டெல்லி தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தலைநகரில் மொத்தம் ஒரு கோடியே 55 லட்சத்து 24 ஆயிரத்து 858 பதிவான வாக்காளர்கள் இருப்பதாக 2025இல் வெளியான தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் நடப்பாண்டில் எந்த தேர்தலும் நடைபெறவில்லை என்றாலும், முன்கூட்டியே தயாராக இருப்பது முக்கியம் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.