ராகுல் காந்தி
ராகுல் காந்தி ட்விட்டர்
இந்தியா

அன்றே சொன்னார் ராகுல் காந்தி! தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து வைரலாகும் 2019ம் ஆண்டு பதிவு!

Prakash J

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ’தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தத் தீர்ப்பைப் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கேரள வயநாடு தொகுதியும் எம்பியுமான ராகுல் காந்தி, ”நரேந்திர மோடியின் ஊழல் கொள்கையின் மற்றுமொரு ஆதாரம் உங்கள்முன் வந்துள்ளது. ஊழல் மற்றும் கமிஷன் பெறுவதற்கான ஒரு தடமாக பாஜக தேர்தல் பத்திரங்களை உருவாக்கியது. இன்று இந்த விவகாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேநேரத்தில், இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோதே, ராகுல் காந்தி இதுகுறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதை, நெட்டிசன்கள் இன்று எடுத்து ’அன்றே சொன்ன ராகுல் காந்தி’ எனப் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர். இதனால், அந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 2019 நவம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், ’புதிய இந்தியாவில், லஞ்சம் மற்றும் சட்டவிரோத கமிஷன் தேர்தல் பத்திரம் என்று அழைக்கப்படுகின்றது’ என தெரிவித்திருந்தார்.