இந்தியா

குஜராத்திற்கு ஏன் இன்று தேர்தல் அறிவிக்கவில்லை?.. தேர்தல் ஆணையம் சொல்லும் 3 காரணங்கள்!

ச. முத்துகிருஷ்ணன்

இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களின் தேர்தல் அட்டவணை பாரம்பரியமாக ஒரே நாளில் அறிவிக்கப்படும் நிலையில், இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கான தேர்தல் அட்டவணையை மட்டும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை இன்று அறிவிக்கப்படவில்லை. குஜராத் தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் (தேதி குறிப்பிடவில்லை) என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் இருக்கும் நிலையில், பரவலாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாதது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இரு மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடையும் நிலையில், குஜராத்திற்கு மட்டும் தேர்தல் அட்டவணை அறிவிப்பு வெளியாகவில்லை. வழக்கமான இந்த வேளைகளில் இரு மாநிலங்களுக்கும் தேர்தல் தேதிகள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, ஒரே நாளில் முடிவுகள் வெளியாகும் வகையில் தேர்தல் அட்டவணை வெளியாகும். ஆனால் இம்முறை நிகழ்ந்துள்ள மாற்றம் பல கேள்விகளுக்கு வழிவகுத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் அறிவிக்கப்படாததற்கான காரணங்களை விளக்கியுள்ளது.

1. தனித்தனியே இரு மாநிலங்களுக்கு தேர்தல் நடத்த, தேர்தல் முடிவுகள் ஒன்றை மற்றொன்று பாதிக்காத வகையில் இடைவெளி குறைந்தபட்சம் 30 நாட்கள் இருக்க வேண்டும். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி 18ம் தேதியும், இமாச்சல பிரதேசத்தின் பதவிக்காலம் ஜனவரி 8ம் தேதியும் முடிவடைகிறது. இரு மாநிலங்களின் சட்டசபைகள் முடிவதற்கு இடையே 40 நாட்கள் இடைவெளி உள்ளதால் தனித்தனியே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

2. வானிலை போன்ற காரணிகளையும் தேர்தல் அறிவிப்பில் கருத்தில் கொண்டு வெளியிடுகிறோம். இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன்பே தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டதால் இமாச்சலுக்கு முதலில் தேர்தல் அட்டவணை வெளியாகி உள்ளது.

3. பாதுகாப்பையும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது. அதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் மாதிரி நடத்தை விதிகள் இம்முறை குறைவான நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். 70 நாட்களுக்கு பதிலாக 57 நாட்களுக்கு மட்டும் நடத்தை விதிகள் பொருந்தும்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “வெளிப்படையாக, சில மெகா வாக்குறுதிகளை வழங்குவதற்கும், மேலும் அரசு திட்டங்களுக்கான விழாக்களை நிறைவேற்றுவதற்கும் பிரதமருக்கு அதிக அவகாசம் வழங்குவதற்காக இது செய்யப்பட்டது. ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று தெரிவித்துள்ளார்.