தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாளை மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது. தேசிய வாக்காளர் தினமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, தலைநகர் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ''ஹலோ வாக்காளர்கள்'' என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள ரேடியோவை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது.முதல் முறை வாக்களிப்பதற்காக மொபைல் எண்ணுடன் விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, 'இ - இபிக்' எனப்படும் மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக, பிப்.,1 முதல், அனைத்து வாக்காளர்களுக்கும், 'இ - இபிக்' பதிவிறக்கிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.