கொரோனா வைரஸ் தொற்று பரவலால் தபால் ஓட்டுப் போடும் வயது வரம்பைக் குறைத்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்கம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தை அடையும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் பீகாரில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியுடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியின் சட்டசபை ஆயுட்காலமும் நவம்பர் மாதத்தில் முடிவுக்கு வர இருக்கிறது. அதனால் அங்கு அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் அங்குத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கொரோனா வைரஸின் தாக்கம் முதியோர்களை அதிகம் பாதித்து வருவதால், அங்குத் தபால் மூலம் வாக்கு செலுத்துவோரின் வயது 80லிருந்து 65 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் பீகார் சட்டசபைத் தேர்தலில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக காவல்துறையினர், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசுத் துறையினர், மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனாவின் தாக்கத்தால் தற்போது இந்த நடைமுறையைத் தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.