பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுமையாக தெரியவர இன்று இரவு கூட ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
பீகாரில் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் அதிகாரி சீனிவாஸ் “4.10 கோடி வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகள்(25 சதவீதம்) மட்டுமே இதுவரை எண்ணப்பட்டுள்ளன. கொரோனா முன்னெச்சரிக்கையாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டதால் சுற்றுக்கள் அதிகரித்துள்ளன” எனத் தெரிவித்தனர்.
அதாவது 25, 26 சுற்றுகளுக்கு பதிலாக சுமார் 35 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், வாக்கு எண்ணிக்கை முடிவு முழுமையாக தெரிய வர இன்று இரவு கூட ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் முன்னிலை நிலவரத்திலும் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்னரே மாநில ஆணையம் தரப்பில் விளக்கம் அளிப்பது இதுவே முதல் முறை என தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே 2.15 மணி நிலவரப்படி நிதிஷ் குமார்- பாஜக கூட்டணி 127 இடங்களிலும், தேஜஸ்வி- காங்கிரஸ் கூட்டணி 105 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 9 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.