செய்தியாளர் - ராஜ்குமார்
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் கடல் வெப்பநிலை மாற்றங்கள் உலக நாடுகளின் பருவநிலை மற்றும் வானிலை நிகழ்வுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் நிகழ்வை எல் நினோ (El Niño) என்கிறோம். இந்த நிகழ்வு கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து, சூப்பர் எல் நினோவாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வு உலகின் பல்வேறு நாடுகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, அடுத்தடுத்த மாதங்களில் எல் நினோவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் (INCOIS) சிறப்பு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2026 நவம்பர் முதல் 2027 மார்ச் மாதம் வரை எல் நினோ நிலை தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 2027 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ENSO Neutral எனப்படும் நடுநிலைக் காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2027 ஜூன் மாதம் முதல் ஆண்டின் பிற்பகுதி வரை லா நினோ உருவாகி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எல் நினோவுக்கு நேர்மாறாக, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிடக் குறையும் நிகழ்வையே லா நினோ (La Niña) என்கிறோம். இந்த நிகழ்வும் உலகம் முழுவதும் மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் காற்றின் போக்கில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது.
இந்த மாற்றங்கள் இந்தியாவிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக, எல் நினோ காலத்தில் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில், லா நினோ காலத்தில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், இந்தியாவில் மழைப்பொழிவு அதிகரிக்கச் சாதகமான சூழல் உருவாகலாம். இதன் தாக்கம் விவசாயம், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மற்றும் குடிநீர் ஆதாரங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், லா நினோ உருவானால் இந்தியா முழுவதும் அதிக மழைப்பொழிவு ஏற்படும் என்று உறுதியாகக் கூற முடியாது.
இவ்வாறு, தற்போது வலுப்பெற்று வரும் எல் நினோ 2027ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கவும், அதன்பிறகு லா நினோ உருவாகவும் வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இந்தியாவின் பருவமழை மற்றும் கடல் சார்ந்த சூழல்களில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.