மகாராஷ்டிராவில் ஏழைப் பெண்களை குறிவைத்து கருமுட்டை மோசடி நடத்திய மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகள் வழங்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் 20 பெண்கள் இந்த மோசடிக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஏழைப் பெண்களை குறிவைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கருமுட்டை தானம் மோசடியை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஒருமுறை கருமுட்டை திருட்டு நடத்திய பெண்களிடமே மீண்டும் மீண்டும் சுரண்டலில் ஈடுபட்டிருக்கிறது அந்த கும்பல் என்றும் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சுழற்சிக்கு ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டை உற்பத்தியை அதிகரிக்க ஹார்மோன் ஊசிகள் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் மீண்டும் மீண்டும் நன்கொடையாளர்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்களின் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது .
இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் காவல் துறை, ஏழைப் பெண்கள் IVF மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கருமுட்டைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கப்பட்டு லட்சக்கணக்கில் விற்கப்பட்டன, இதுவரை 20 பெண்கள் இந்த மோசடிக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முட்டை தானம் என்பது ஒரு கருவுறுதல் செயல்முறையாகும், இதில் ஒரு பெண் மற்றொரு நபருக்கு கருத்தரிக்க முட்டைகளை வழங்குகிறார், பொதுவாக IVF (இன் விட்ரோ கருத்தரித்தல்) மூலம் இந்த செயல்முறை நடைபெறுகிறது.
இந்த மோசடி தொடர்பாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் வருவாய் கோடிக்கணக்கில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், உயர்மட்ட பெயர்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.