இந்தியா

நவோதயாவுக்கு இணையாக ஏகலைவன் பள்ளிகள்: ஜேட்லி புது அறிவிப்பு

webteam

ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கல்வி கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 புதிய மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது இன்றும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது என்று பட்ஜட் உரையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த ஒருலட்சம் கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கல்வி கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்று கூறிய அமைச்சர், கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவது அதிகரிக்கப்படும் என்றார். இதன் மூலம் கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் பலகைக்கு மாறும் நடவடிக்கைகள் எளிதாகும் என்றும், கற்பித்தல் முறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

பழங்குடியின குழந்தைகளுக்காக நவோதயா பள்ளிகளுக்கு இணையாக ஏகலைவன் பள்ளிகள் தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் ஆராய்ச்சி மாணவர் திட்டத்தின் கீழ், பிடெக் மாணவர்கள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பிஎச்டி படிக்க உதவி செய்யப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்துவதன் மூலம் புதிதாக 24 மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.