பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வரும் சீன அதிபர், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கே பெருமை சேர்க்கிறது. நிகழ்ச்சிக்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனா, தமிழகம் இடையே வணிக, கலாசார ரீதியான தொடர்பு இருந்தது.
பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லபுரம், நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது பொருத்தமானது. பேச்சுவார்த்தை நடப்பதன்மூலம் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. சீன அதிபரின் வருகை தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். சோழர்கள் காலத்திலும் சீனாவுடன் வணிகத் தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை” எனக் குறிப்பிட்டுள்ளார்.