இந்தியா

டி.கே.சிவக்குமார் மகளிடம் அமலாக்கத் துறை விசாரணை

webteam

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் மகளிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டில் கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவரது 22 வயது மகள் ஐஸ்வர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஐஸ்வர்யா ஆஜரானார். மேலாண்மைப் பட்டம் பெற்ற அவர், தனது தந்தையின் அறக்கட்டளையில் அறங்காவலராக உள்ளார். 

அந்த அறக்கட்டளை சார்பில் பொறியியல் மற்றும் இதர கல்லூரிகள் நடைபெறும் நிலையில், பல கோடி ரூபாய் வர்த்தகம் மற்றும் சொத்துக்கள் உள்ளன. அவற்றின் நிர்வாகத்தில் ஐஸ்வர்யா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அவரிடம் அமலாக்கத் துறை விசாரிக்கிறது. கடந்த 3ஆம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு சிவக்குமார் அளித்த தகவல்களுடன் ஐஸ்வர்யா தரும் தகவல்களை ஒப்பிட்டு விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.